Followers

Wednesday, January 1, 2020

ஞானக் களஞ்சியம் - குரு வணக்கம்

அருள் துறைக்கு நேர்வழி 

முட்டைக்குள் அமைந்தகரு உடலாலும் உயிராலும் வளர்ச்சி பெற்றால் 
மூடிய ஓடுடைந்துவிடும்; குஞ்சு வெளிஉலகைக் கண்டின்பம் துய்க்கும்;
திட்டமிட்டு அறம்  ஆற்றித் தூய்மை  அறிவில் உடலில் பெற்று விட்டால் 
தீரும்வினை; புலன்மயக்கம் தாண்டிடலாம்; தீய  வினைப்பதிவு  எல்லாம் 
விட்டுவிடும்;   விளைவாக வீடுபேறெனும் அறிவையறிதல் கிட்டும்.
வினைப்பயனைப் போக்காமல் வீட்டையடைய விரும்புவதோ பொருந்திடாது.
தட்டுங்கள் திறக்குமென்றார் தனக்குள்ளேயே பேராற்றல் புதையல்கண்டோர் 
தக்கவழி அருட்குருவின் தாள்பணிந்து தவம்பயின்று தனைஉணர்தல்.

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 

வற்றாயிருப்பு

பல கோடான கோடி நுண்துகள்களின் தொடரியக்கம் தான் ஆன்மா. ஆன்மாவின் இயக்கத்தையும், எல்லை விரிவையும் கோசம் என்று குறிப்பிடுவர். ஆன்மா ஐந்து கோசங்களாக வகைப் படுத்தப்படுகின்றன. 

அன்னமய கோசம் 

உடல் தேவைகளை உணர்ந்து முடிக்கும் அளவில் அன்னமய  கோசமாக ஆன்மா செயல் படுகிறது. இந்நிலையில் மனம் உணர்ச்சி வசப்படும்.

மனோமய கோசம் 

புலனியக்க பதிவுகளின் போதும் நினைவலைகளை பிரதிபலிக்கும் போதும் ஆன்மா மனோமய கோசமாக செயல் படுகிறது. இந்நிலையிலும் மனம் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கும்.

பிராணமய கோசம் 

ஆன்மா தன் உணர்வாற்றலை நிலைபெறச் செய்யும் போது பிராணமய கோசமாக இருக்கிறது. இங்கு மனம் அறிவு நிலையில் இருக்கும்.

விஞ்ஞானமய கோசம் 

ஆன்மா பேரியக்க மண்டலத்தின் தோற்றம், இயக்கம், விளைவுகளை உணரும் போது விஞ்ஞானமய கோசமாகச் செயல்படுகிறது. இங்கு மனம் மெய்யுணர்வாக இருக்கும்.

ஆனந்தமய கோசம் 

ஆன்மா மெய் பொருளுணர்வு பெறும் போது ஆனந்தமய கோசமாக நிறைந்து முழுமை பெறுகிறது. இங்கும் மனத்தின் நிலை மெய்யுணர்வாக இருக்கும்.

வாழ்க வையகம் 
வாழ்க  வளமுடன் 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 

Sunday, December 29, 2019

ஞானக் களஞ்சியம் - இறை வணக்கம்

அழுத்தமெனும் உந்தாற்றல் ஒன்றைக் கொண்டே,
அணுமுதலாய் அண்டகோடி அனைத்தும் ஆக்கி
வழுத்துமோர் அறிவுமுதல் ஐந்தும்  ஆறும்
வகைவகையாம் உயிரினங்கள்  தோற்று வித்து,
முழுத்திறனுடன் காத்து, முடிக்கும் மேலாம்
பழுத்தநிலை வரும்வரையில் "நீ,  நான்" என்போம்
முழுமுதற் பொருளே நம்மறிவாய்  ஆற்றும்
பதமடைந்தோம்; ஒன்றானோம்; பரமானந்தம்.

வாழ்க வையகம் 
வாழ்க வளமுடன் 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 

வற்றாயிருப்பு

பருஉடலுக்கு உள்ளாக நுண் உடல் என்று சொல்லக்கூடிய சூக்கும உடல் ஓடிக் கொண்டும், சுழன்றுக் கொண்டும் இருக்கிறது. அந்த சுழற்சியினால் ஒவ்வொரு அணுவும் காந்த அலை வீசிக் கொண்டு இருக்கிறது. இந்த காந்த ஆற்றல் உடல் முழுவதுமாக பரவுகிறது. இவ்வாற்றல் தான் புலன் இயக்கமாகவும், மன இயக்கமாகவும் இயங்கி வருகின்றன. மனம் ஜீவகாந்த அலையாக இயங்குவதால், இந்தச் சக்தியை நம் உடலில் குறைபாடுள்ள இடத்தில செலுத்தினால் அங்குள்ள குறைபாடு நீங்கி விடும். காந்த ஆற்றல் ஒவ்வொரு அணுவையும் நலமாக வைத்துக் கொள்ளும். மனதின் சக்தியை நாம் உணர வேண்டும். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் தான் நம் அறிவின் பயணத்தில் தடை ஏற்படாமல் இருக்கும். இரத்த ஓட்டம் உடலில் உள்ள எல்லா இடங்களுக்கும் சீராக பரவ வேண்டும். நரம்புகள் மூலம் உயிர்ச்சக்தி வெப்பமாகி உடலில் மின்சாரமாகப் பரவுகிறது. பிராண வாயு உடலில் சீராக இருக்க வேண்டும். நம் உடலில் காற்றோட்டம், வெப்ப ஓட்டம், இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். அதற்கு உடற்பயிற்சி  மிக மிக அவசியம். குரு வேதாத்திரி மகரிஷி அருளிய எளிய முறை உடற்பயிற்சி வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாள் தவறாமல் இப்பயிற்சியை செய்யும் போது உடலும் மனமும் புத்துணர்வாக இருக்கிறது. உயிரை பரத்துக்கு கொண்டு வந்து எந்த நிலையிலேயும் நிலைத்து நிற்க பழக வேண்டும். அது தான் தவம். ஆணவம், கன்மம், மாயை என்ற களங்கம் நீங்கிய ஜீவனுக்கு ப்ரம்மம் என்று பெயர். களங்கம் நீங்கிய ஜீவன் மெய் பொருளாகவே மாறும். உண்மை நிலை அறிவதற்காகவே மனித உடலுக்கு ஆறாவது  அறிவு வந்த போதிலும் பழக்க வழக்கம் காரணமாக வந்த இலட்சியத்தை மறந்து விட்டோம். பொருள் மற்றும் புலனுணர்ச்சி மீது பற்றுக் கொண்டு பலவாறான செயல்கள் செய்து வாழ்ந்து வருகிறோம். இதனால் பல தொல்லைகளுக்கும், துன்பங்களுக்கும், சிக்கல்களுக்கும் உள்ளாகிறோம். மனித சமுதாயம் இந்தச் சிக்கல்களிலிருந்து மீண்டு வருவதற்கு எல்லோரும்  தமக்குத் தாமே அவர்கள் மனதை சோதித்துக் கொள்ள வேண்டும். சிறிதும் தாமதமில்லாமல் உடனே தற்சோதனைக்கு நம்மை நாமே உட்படுத்திக் கொள்ள வேண்டும். என்றாவது ஒருநாள் நம் அறிவுக்குள்ளாக புதைந்துக் கிடக்கும் இயற்கை ரகசியங்கள் தெரிந்து விடும். பழக்கத்தினால் சிக்கிய நம் வாழ்க்கையை, விளக்கத்தின் வழியே மாற்றி உயர்வு அடைய வேண்டும். விளக்கத்தின் வழியே சென்றால் நாம் அடைய வேண்டிய இடமான எல்லையில்லா இருப்பு மண்டலத்தோடு இணைவது ஞான மார்க்கமாகும். அந்த ஞான மார்க்கத்தை அடைவதற்கு வழியில் ஏற்படும் தடைகளை கண்டு பிடித்து அவற்றை திருத்தி, உணர்ந்து உயர்ந்து அதுவாகவே மாறுவது தான் ஆன்மிகம். நம் உடலுக்குள் உயிர் ஆன்மாவாக இயங்கிக் கொண்டிருக்கிறது, அதே உயிர் உடலுக்கு வெளியே மகாகாசமாக பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து இருக்கிறது. பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து இருக்கக்கூடிய மகாகாசத்தை நாம் உயிர் என்ற பெயரில் உடலளவில் எல்லைக் கட்டிவிட்டோம். நாம் மனதால் எல்லையில்லாமல் விரிய வேண்டும். ஆன்மாவின் செயலும், அனுபவமும் தான் மனம். பல கோடான கோடி நுண்துகள்களின் தொடரியக்கம் தான் ஆன்மா. 

வாழ்க  வையகம்
வாழ்க  வளமுடன்
எல்லா உயிர்களும் இன்புற்று இன்புற்று வாழ்க 

Saturday, December 28, 2019

ஞானக் களஞ்சியம் - இறை வணக்கம்

எல்லாம் வல்ல தெய்வமது;
எங்கும் உள்ளது நீக்கமற;
சொல்லால் மட்டும் நம்பாதே;
சுயமாய் சிந்தித்தே தெளிவாய்!
வல்லாய் உடலில் இயக்கமவன்;
வாழ்வில் உயிரில் அறிவுமவன்;
கல்லார் கற்றார் செயல்  விளைவாய்க்
காணும் இன்ப துன்பமவன்.
அவனின் இயக்கம் அணுவாற்றல்,
அணுவின் கூட்டுப் பக்குவம் நீ!
அவனில்தான் நீ! உன்னில் அவன்!
அவன்யார்? நீயார்? பிரிவேது?
அவனை மறந்தால் நீ சிறியோன்;
அவனை அறிந்தால் நீ பெரியோன்;
அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம்,
அறிவு முழுமை அது முக்தி.

வாழ்க வையகம் 
வாழ்க  வளமுடன் 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 

Friday, December 27, 2019

வற்றாயிருப்பு

மனிதன் தன் ஆறாவது அறிவு கொண்டு மனம்,  உயிர், மெய் என்னும் மூன்று மறை பொருட்களை உணர வேண்டும். மறை பொருட்களை உணர்ந்த மனிதனின் அறிவு பிற உயிர்களை மதித்து அன்போடும், பண்போடும், கருணையோடும் சிறப்பாக வாழ வழி வகுக்கும். இறை நிலையை அடைவதே ஒவ்வொரு உயிரின் நோக்கமாக இருக்கிறது. இவ்வறிவை பெறுவதற்குரிய உயர்ந்த அறிவு மனிதப்பிறவிக்கு மட்டுமே உண்டு. வாழ்க்கையை பற்றியும், அதன் நோக்கத்தை பற்றியும், அந்நோக்கத்திற்கு ஏற்ப வாழும் முறை பற்றியும் அறிந்து கொள்வதே ஞானமாகும். புறக்கவர்ச்சியிலும், சூழ்நிலை கவர்ச்சியிலும்  சிக்கும் போது பிறவியின் நோக்கம் மறந்து போகிறோம். நாம் மனது வைத்தால் மட்டுமே நம்மை நாமே உயர்த்திக் கொள்ள முடியும். அறிவின் பயணத்திற்கு மனம்  தனது மூலமான உயிரில் ஒடுங்க வேண்டும், பின்பு உயிரின் மூலமான இறை நிலையை அடைய வேண்டும்.  அப்பொழுது அவனே அறிவாக நிற்கிறான், அந்த  அறிவை பெற்ற மனம் கொண்ட மனிதன் தரத்தில் தெய்வமாகிறான். நம் மனதிற்குள்ளே இன்பமும், அமைதியும் புதைந்து கிடக்கின்றன. எல்லாவற்றையும் கடந்து உனக்குள்ளாக உள்ளே சென்று உன்னை பார், அது தான் கடவுள். மனம் அறிவிலிருந்து வந்தது. மனம் அறிவை  சந்திக்க வேண்டும். எல்லா இயற்கை ரகசியங்களையும் மனம் புரிந்துக் கொள்ள வேண்டும். மனத்தை அறிய அறிய அது பூரணமாகிறது. எல்லாம்  சிவமயமாக  தோன்றும். சிவம் என்றால் பூரணம், பேரறிவு,  வற்றாயிருப்பு. உயிர் துகள்களில் ஆதியென்னும் ப்ரம்மம் அறிவாக ஒடுங்கியுள்ளது. நம் மனத்தை உயர்த்தி, தூய்மை செய்து, வலுப்படுத்தி, நெறிப்படுத்திக்  கொள்ளும் அளவிற்கு மனிதனின் வெற்றி, மதிப்பு, வாழ்வு, வளங்கள் எல்லாம் அமையும். ஆன்மா லயமாவதே "ஆலயம்" எனப்படுகிறது. லயமென்றால் திருப்தி -  ஆத்ம திருப்தி.

 
வாழ்க வையகம்
  வாழ்க வளமுடன் 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

ஞானக் களஞ்சியம் - இறை வணக்கம்

இறை வணக்கம் 

ஆதியெனும் பரம்பொருள் மெய் எழுச்சிபெற்று,
அணுவென்ற உயிராகி, அணுக்கள் கூடி,
மூலகங்கள் பலவாகி, அவை இணைந்து,
பேதித்த அண்ட கோடிகளாய் மற்றும்
பிறப்பு இறப்பிடை உணர்தல் இயக்கமாகி,
நீதிநெறி உணர் மாந்தராகி, வாழும்
நிலையுணர்ந்து தொண்டாற்றி இன்பம் காண்போம்.
மோதியிணைந்து இயங்குகின்ற நிலைமைக்கு ஏற்ப,
         

வாழ்க வையகம்   வாழ்க  வளமுடன்