Followers

Wednesday, January 1, 2020

ஞானக் களஞ்சியம் - குரு வணக்கம்

அருள் துறைக்கு நேர்வழி 

முட்டைக்குள் அமைந்தகரு உடலாலும் உயிராலும் வளர்ச்சி பெற்றால் 
மூடிய ஓடுடைந்துவிடும்; குஞ்சு வெளிஉலகைக் கண்டின்பம் துய்க்கும்;
திட்டமிட்டு அறம்  ஆற்றித் தூய்மை  அறிவில் உடலில் பெற்று விட்டால் 
தீரும்வினை; புலன்மயக்கம் தாண்டிடலாம்; தீய  வினைப்பதிவு  எல்லாம் 
விட்டுவிடும்;   விளைவாக வீடுபேறெனும் அறிவையறிதல் கிட்டும்.
வினைப்பயனைப் போக்காமல் வீட்டையடைய விரும்புவதோ பொருந்திடாது.
தட்டுங்கள் திறக்குமென்றார் தனக்குள்ளேயே பேராற்றல் புதையல்கண்டோர் 
தக்கவழி அருட்குருவின் தாள்பணிந்து தவம்பயின்று தனைஉணர்தல்.

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 

வற்றாயிருப்பு

பல கோடான கோடி நுண்துகள்களின் தொடரியக்கம் தான் ஆன்மா. ஆன்மாவின் இயக்கத்தையும், எல்லை விரிவையும் கோசம் என்று குறிப்பிடுவர். ஆன்மா ஐந்து கோசங்களாக வகைப் படுத்தப்படுகின்றன. 

அன்னமய கோசம் 

உடல் தேவைகளை உணர்ந்து முடிக்கும் அளவில் அன்னமய  கோசமாக ஆன்மா செயல் படுகிறது. இந்நிலையில் மனம் உணர்ச்சி வசப்படும்.

மனோமய கோசம் 

புலனியக்க பதிவுகளின் போதும் நினைவலைகளை பிரதிபலிக்கும் போதும் ஆன்மா மனோமய கோசமாக செயல் படுகிறது. இந்நிலையிலும் மனம் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கும்.

பிராணமய கோசம் 

ஆன்மா தன் உணர்வாற்றலை நிலைபெறச் செய்யும் போது பிராணமய கோசமாக இருக்கிறது. இங்கு மனம் அறிவு நிலையில் இருக்கும்.

விஞ்ஞானமய கோசம் 

ஆன்மா பேரியக்க மண்டலத்தின் தோற்றம், இயக்கம், விளைவுகளை உணரும் போது விஞ்ஞானமய கோசமாகச் செயல்படுகிறது. இங்கு மனம் மெய்யுணர்வாக இருக்கும்.

ஆனந்தமய கோசம் 

ஆன்மா மெய் பொருளுணர்வு பெறும் போது ஆனந்தமய கோசமாக நிறைந்து முழுமை பெறுகிறது. இங்கும் மனத்தின் நிலை மெய்யுணர்வாக இருக்கும்.

வாழ்க வையகம் 
வாழ்க  வளமுடன் 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க