தியானம் என்றால் என்ன?
முன்பு நாம் என்னென்ன காரியங்கள் செய்தோமோ, அதே போல் உடலிலே சக்தி ஏற்படும். அந்த சக்தியின் காரணமாக அதே எண்ணம், அதே செயல் உண்டாகின்றது. நாம் இப்பொழுது எண்ணத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். அதற்கு முறையான பயிற்சி அவசியமாகிறது. நம்முடைய மனத்தை நம்முடைய விருப்பப்படி நடத்தி நாம் அடைய வேண்டிய எல்லாப் பேறுகளையும் எல்லா இலட்சியங்களையும் வாழ்க்கையிலே அடைய முடியும். அதற்குரிய பயிற்சியை தான் யோகம் என்றும் அகத்தவம் என்றும் லயம் என்றும் சொல்லுவார்கள்.
அந்த மனப்பயிற்சியை பழைய யோக நூல்களிலே நான்கு விதமாக கொடுத்திருக்கிறார்கள். அந்த நான்கு விதமான பயிற்சிகள் பிரத்தியாகாரா, தாரணா, தியானம், சமாதி எனப்படுகின்றன.
பிரத்தியாகாரா:
'பிரத்தியாகாரா' என்றால் இதுவரையிலே என்னென்ன காரியங்கள் செய்தோமோ, அதன் வழியே மனம் ஓடிக் கொண்டு இருக்கின்றதே, அதை முதலில் அதன் வழியே ஓடாமல் திருப்பி விடுவது - ஓட்டத்திலிருந்து மாற்றியமைப்பது - இதுவே பிரத்தியாகாரா.
தாரணா:
தன் விருப்பம் போல ஏதோ ஒரு பொருள் மீது, செயல் மீது, நினைவின் மீது மனத்தை நிறுத்தி வைக்க பழகுவது (Focussing attention on one thing at will) இதை 'Concentration' என்று கூறுவார்கள். இது தான் தாரணா.
தியானம்:
இந்த மனம் எங்கிருந்து புறப்படுகின்றதோ, அது புறப்படுகின்ற இடத்திலேயே மனத்தை கொண்டு வந்து நிலை நிறுத்த பழகுவது என்பது தான் தியானம். நம்முடைய உயிராற்றல் தான் மனம். உயிர் சக்தியினுடைய படர்க்கை நிலை தான் மனமாக இருக்கின்றது. இந்த உடலில் உயிர் இயங்கும் போது, அதிலிருந்து ஒரு அலை வீச்சு உண்டாகிறது, அலையின் மூலமாக புலன்கள் வழியே சென்று உயிரே மனமாக இயங்கி கொண்டிருக்கிறது. அந்த மனத்தை அந்த உயிர் மேலேயே லயிக்க செய்வது தான் தியானம் ஆகும்.
சமாதி:
எல்லாவற்றிற்கும் மேலான மெய்ப்பொருளோடு மனத்தை ஒன்ற வைத்து தானும் அதுவாகவே மாறி விடுகின்ற ஒரு நிலையை தான் 'சமாதி' என்று சொல்லுவார்கள்.
இவ்வாறு பிரத்தியாகாரா, தாரணா, தியானம், சமாதி என்ற இந்நான்கு பயிற்சிகளையும் முற்காலத்திலே மனப்பயிற்சியாக ஏற்படுத்தி வைத்திருந்தார்கள்.
No comments:
Post a Comment