உயிரின் படர்க்கை நிலையே மனம்
உயிர் வேறு, மனம் வேறு இல்லை. கோடான கோடி துகள்கள் சேர்ந்து ஒருங்கே ஒரு தொடராக, கோவையாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அதை சூக்கும சரீரம் என்று சொல்கிறோம். அந்த சூக்கும சரீரம் உடலில் இயங்கி கொண்டிருக்கிற பொழுது, ஒவ்வொரு உயிர் துகளிலிருந்தும் தற்சுழலால் ஓர் அலை உண்டாகிறது. உயிர் துகள்கள் அத்தனையும் சேர்ந்து அளிக்கும் அந்த அலைப் பெருக்கத்தை உயிர் ஆற்றல் அழுத்தம் (Bio-Magnetism) என்று சொல்கிறோம். அந்த அலை அழுத்தம் உடலாற்றலாகவும், மன ஆற்றலாகவும் செயல்படுகின்றது. இப்படி உயிர்த் தொகுதியிலிருந்து தோன்றும் ஒரே அலை அழுத்த ஆற்றலை ஐந்து புலன்கள் மூலமாக எப்பொழுதும் நாம் செலவிட்டு பழகி கொண்டுள்ளோம். உயிரினுடைய அலை இயக்கம் ஓர் அளவில் வந்து கொண்டேயிருக்கிறது; ஓர் அளவில் போய்க்கொண்டேயும் இருக்கிறது. இவ்வாறு புறப்படுவதற்கும், ஒடுங்குவதற்கும் மத்தியிலே இருக்கக் கூடிய ஒரு இயக்கம் தான் அழுத்தமாக, அவ்வழுத்தம் ஒன்றோடு ஒன்று மோதும் போது ஒலியாக, ஒளியாக, சுவையாக, மணமாக, மனமாக இயங்கக் கூடிய உன்னதமான வியத்தகு ஆற்றலாக உள்ளது. ஆகவே மனம் என்பது உயிரிலிருந்து வந்து கொண்டே இருக்கும் அலை இயக்கம் தான். மனம், எண்ணம் இரண்டும் ஒன்றே தான். மனமானது எந்த இயக்கத்திலே, எந்த பொருளை பற்றி நினைத்தாலும் காலம், தூரம், பருமன், வேகம் என்ற நான்கு பரிமாணத்திலே தான் மனம் இயங்குகின்றது.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க